ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

விரைவு ரயில்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
நாடு முழுதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக, ரயில்வே துறை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ரயில் கட்டணத்தில் மாற்றம் செய்திருந்த நிலையில், தற்போது ரயில் கட்டணத்தை சிறிது உயர்த்தி, ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, 500 கி.மீ.,க்கு மேலான நீண்ட துார பயணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன் விபரம்:
★ புறநகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை
★ விரைவு ரயில்களில் 500 கி.மீ., வரை கட்டண அதிகரிப்பு இல்லை
★ 501 முதல் 1,500 கி.மீ., துாரத்துக்கு 5 ரூபாய் அதிகரிப்பு
★ 1,501 முதல் 2,500 கி.மீ.,க்கு 10 ரூபாய் அதிகரிப்பு
★ 2,501 முதல் 3,000 கி.மீ.,க்கு 15 ரூபாய் அதிகரிப்பு
★ 'ஸ்லீப்பர்' முன்பதிவு வகுப்பு பெட்டியில், 1 கி.மீ.,க்கு 5 காசு அதிகரிப்பு
★ முதல் வகுப்பு 'ஏசி' 1 கி.மீ.,க்கு 5 காசு அதிகரிப்பு
★ பிற 'ஏசி' வகுப்புகளுக்கு, 1 கி.மீ.,க்கு 2 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது
★ ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் எந்த மாற்றம் இல்லை.
ஏற்கனவே எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த மாற்றமும் இன்றி, தற்போதைய கட்டணமே பொருந்தும்.