dark_mode
Image
  • Friday, 04 July 2025

ஸ்விக்கி, ஜொமாட்டோ கூடுதல் கமிஷன்; நாமக்கல்லில் உணவு சப்ளை நிறுத்தம்

ஸ்விக்கி, ஜொமாட்டோ கூடுதல் கமிஷன்; நாமக்கல்லில் உணவு சப்ளை நிறுத்தம்

நாமக்கல்: கூடுதல் கமிஷன் வசூலிக்கும், 'ஸ்விக்கி, ஜொமாட்டோ' ஆன்லைன் நிறுவனங்களுக்கு, நேற்று முதல் உணவு சப்ளை நிறுத்தப்பட்டதால், நாமக்கல் தாலுகாவில் 8 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட ேஹாட்டல்கள், பேக்கரிகளில், ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு சப்ளை செய்து வந்தன.

பல்வேறு கட்டணம்

அந்நிறுவனத்தினர், ேஹாட்டல் உரிமையாளர்களிடம், குறைந்த தொகை கமிஷன் கொடுத்தால் போதும் என, கூறினர்.

ஆனால், விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., என பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்து, குறைந்த தொகையை ேஹாட்டல் உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

ஒவ்வொரு கடைக்கும் வெவ்வேறு விதமான கமிஷன் வழங்குகின்றனர். குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்வதால், ேஹாட்டல் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

அதனால், 'கமிஷன் தொகையை ஒழுங்குப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், ஜூலை, 1 முதல், ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு சப்ளை முழுதுமாக நிறுத்துவோம்' என, கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனத்தினர், நாமக்கல் நகர ேஹாட்டல், பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, கமிஷன் தொகை குறைப்பது, மறைமுக கட்டணம் நிறுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது.

ஆனால், ேஹாட்டல் உரிமையாளர்கள் கோரிக்கையை, உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்தன.

வர்த்தகம் பாதிப்பு

 

இதையடுத்து, திட்டமிட்டபடி ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு, நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், பேக்கரிகளில் இருந்து உணவு பொருட்கள் சப்ளை நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

 

நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்க செயலர் அருள்குமரன் கூறுகையில், ''நாங்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு சப்ளையை நிறுத்தியதால், நாள் ஒன்றுக்கு, 8 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கும். எப்போதும் போல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

related_post