NEP-யால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம்.. மோடி அரசின் நோக்கம் இதுதான் - திருமாவளவன் விளாசல்!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் இனி 30 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றால் பெயில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “புதிய கல்விக் கொள்கையின் மூலம் சிபிஎஸ்இ பள்ளிப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தி வருகிறது.
அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி என்று அறிவிக்கிற All Pass முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. இப்போது தேர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
மாணவர்களை பள்ளிக் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்புகிற இடைநிற்றல் சதவீதத்தை உயர்த்துவது தான் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர்களின் நோக்கம், மோடி அரசின் நோக்கம்” என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து, “முடிந்தவரை பள்ளி படிப்பிலேயே வடிகட்டிவிடுவது, குலத்தொழிலுக்கு அனுப்புவது என்பது தான் பாஜகவின் நோக்கம். அதனால்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது குலத்தொழிலுக்கு வழிவகுக்க கூடியதாக இருக்கிறது. மறைமுகமாக அதை திணிக்கிறார்கள்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. அதற்காகத்தான் ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருகிறார்கள். ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “12ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் எங்கள் கருத்து. 5, 8, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு என தொடர்ந்து பொதுத் தேர்வுகளை வைத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வடிகட்டுகிற வேலையை இந்த பாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏன் வேண்டாம் என்று எதிர்க்கிறோம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்" என்று குறிப்பிட்டார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description